InformationNeeds.com
Home/கட்டுரைகள்/ முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் | Thiruvidaikkazhi Subramanya Swamy Temple where Lord Muruga was freed from sin
Spirituality

முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் | Thiruvidaikkazhi Subramanya Swamy Temple where Lord Muruga was freed from sin

June 19, 2024uma589 views
முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் திருவிளையாடல்கள் நடந்த அறுபடை வீடு தவிர, முருகன் கால் பதித்த இடங்கள் இரண்டே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளியை மணந்த வள்ளிமலை. மற்றொன்று முருகன் தவம் செய்து பாவம் நீங்கப் பெற்ற இந்த திருவிடைக்கழி திருக்கோயில். 

வரலாறு 

சூரபத்மனை முருகன் கொன்ற பிறகு சூரபத்மனின் மகன் இரண்யாசுரன் முருகனுக்கு பயந்து மீனாக உருவெடுத்து கடலில் ஒளிந்து கொண்டான். சிவ பக்தரான இரண்யாசுரனையும் முருகன்  பராசக்தியின் அருளால் கொன்றார். அரக்கனாக இருந்தாலும், சிவ பக்தனைக் கொன்ற பாவம் முருகனுக்கு உண்டானது. அதிலிருந்து விடுபட இங்குள்ள குராமரத்தின் கீழ் தவம் செய்தார். இதனால் இத்தலம் 'திருக்குராவடி' என்று பெயர் பெற்றது. எனவே நாமும் இங்குள்ள முருகனைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். 

 இத்தலத்தின் முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஸ்வாமியின் வலது கரம் அபயம் தரும் வகையிலும், இடது கை தொடை மீதும் உள்ளது. கருவறையின் உள்ளே ஒரு சிவலிங்கமும், முருகனுக்கு முன்னால் மற்றொரு லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு நாளும் அர்த்தஜாம பூஜையின் போது முதலில் முருகன் வழிபட்ட பத்ரலிங்கத்திற்கு பூஜை நடக்கும். இங்குள்ள குராமரத்தின் கீழ் தியானம் செய்வதால் மனத் தெளிவும் ஞானமும் கிடைக்கும். 

தெய்வானை தவம் புரிந்த தலம் 

 முருகனை மணம் முடிக்க விரும்பிய தெய்வானை தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தெய்வயானையின் முகம் வெட்கத்தில் சற்றே சாய்ந்திருப்பது போல தெரிவது தனிச்சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில் இவரை வழிபட திருமணத்தடை அகலும். தெய்வானை, முதல் படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல விடை பெற்றதாலும், இரண்யாசுரனை வதம் செய்த முருகப்பெருமானின் மீதுள்ள பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' என்று அழைக்கப்படுகிறது. 

பரிகாரஸ்தலம் 

முருகப்பெருமான் குரா மரத்தடியில் அமர்ந்து சிவனை வழிபட்டது போல, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவகிரகங்கள் இல்லாத இக்கோயிலில் முருகப்பெருமான் நவ நாயகர்களாக விளங்குவதாக ஐதீகம். இந்த முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து வகையான நவக்கிரக தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

நாமும் திருவிடைக்கழி சென்று சுப்பிரமணிய  சுவாமியை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம். 

முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் | Thiruvidaikkazhi Subramanya Swamy Temple where Lord Muruga was freed from sin | InformationNeeds